கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையின்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழகத்தில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் செல்பவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜ், சாலை போக்குவரத்து பிரிவு செயலாளர் ரகுபதி, அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுசெயலாளர் சண்முகம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, வாகன சோதனையின்போது வாகனங்களின் பதிவு எண்ணை பதிவு செய்தாலே அந்த வாகனத்தின் அனைத்து விவரங்களையும் பெறும் தொழில் நுட்ப வாய்ப்பு தற்போது உள்ளது. இந்த நிலையில் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களில் செல்பவர்கள் சோதனையின்போது சிக்கினால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை என்ற உத்தரவு, அனைத்து மோட்டார் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்களை பாதிக்கும்.

வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு பல்வேறு நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ, கார், சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story