‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: ஜி.கே.மணி பேட்டி
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.மணி கூறினார்.
ஈரோடு,
பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அருள்மொழி, எஸ்.சி.ஆர்.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப்பொதுச்செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற 17–ந் தேதி தியாகிகள் தினம் மற்றும் மாநில சமூக நீதி மாநாடு விழுப்புரத்தில் நடக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியத்தை நிறைவேற்றும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அனைத்து தரப்பு மக்களும் தங்கள் உரிமையான சமூக நீதியை பெற வேண்டும் என்பதே எங்கள் மாநாட்டு கொள்கை முழக்கமாக இருக்கும்.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத மாணவி அனிதாவின் தற்கொலை, நீட் தேர்வுக்கே சாவு மணி அடித்து உள்ளது. ஏற்கனவே 12–ம் வகுப்பில் மருத்துவ படிப்புக்கு தேவையான பாடங்களை படித்து வெற்றி பெறும் மாணவ–மாணவிகள் மீண்டும் எதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தியது.
மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரக்கு அனுப்பி வைத்தது. மேலும் 3 மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்கள். தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை பல ஆயிரம் மாணவ–மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோருக்கு ஏற்படுத்தினார்கள். ஆனால் கோர்ட்டில் நமது பாடத்திட்டம், தேர்வுமுறை போன்றவை குறித்து சரியாக எடுத்துக்கூறாமல் விட்டனர். எனவேதான் தற்போது பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
பிளஸ்–2 வில் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவ–மாணவிகள் மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டிய தேவை இல்லை. அப்படி கட்டாயம் என்றால் 9–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை உடனடியாக பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. தரத்துக்கு மாற்றி, 4 ஆண்டுகள் கழித்து தேர்வு நடத்தலாம்.
உடனடியாக தேர்வு என்பதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்துக்கு உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ–ஜியோ சார்பில் வருகிற 7–ந் தேதி (நாளை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் நிர்ணயம் செய்யவும், இடைக்கால நிவாரணம் 20 சதவீதம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, போராட்டத்தை கைவிடச்செய்ய வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகள் அகற்றப்பட்டபோது தமிழகத்தில் 3,321 கடைகள் மூடப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கட்சியில் குளறுபடி, அணி பிரிப்பு, இணைப்பு என்று இருப்பதால் ஆட்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே தமிழக கவர்னர், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் துணைத்தலைவர்கள் எஸ்.எல்.பரமசிவம், என்.ஆர்.வடிவேல், மாநில பொறுப்பாளர்கள் எம்.பி.வெங்கடாசலம், ஷேக்முகைதீன், செந்தில், பரமேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, ஏ.பி.எஸ்.கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.