அடிப்படை வசதி இல்லாத கிராமம் ரேஷன் கார்டை ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு
செம்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாமல் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ரேஷன் கார்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
செம்பட்டி,
நிலககோட்டை ஒன்றியம் செம்பட்டியை அடுத்த பச்சமலையான்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சாலை, தெருவிளககு, கழிப்பறை, சாககடை கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:–
எங்கள் பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் ஆடு–மாடுகளும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றன. சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக்கோரி நிலக்கோட்டை ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எஸ்.புதுககோட்டையில் இருந்து கிருஷ்ணாபுரத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பராமரிப்பு இல்லாததால் தற்போது சாலை இருந்த இடமே தெரியாத அளவுக்கு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அந்த சாலை முழுவதும் கற்கள் நிறைந்து காணப்படுவதால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
மேலும் இந்த சாலையோரத்தில் திறந்தநிலையில் கிணறுகள் உள்ளன. இரவு நேரத்தில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் கிணறு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த 3 நாட்களுககு முன்பு கூட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த லாரி டிரைவரான கருப்பையா என்பவர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு கிணற்றில் தவறி விழுபவர்களை காப்பாற்ற வரும் தீயணைப்பு வீரர்களின் வாகனங்கள் கூட இந்த சாலை வழியாக வந்து செல்ல முடியவில்லை.
இந்த கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் ஒரே ஒரு மின்கம்பத்தில் மட்டுமே தெரு விளககு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் கிராமம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது திருடர்களுக்கு சாதகமாக இருப்பதால் எங்கள் பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் திருடு போகின்றன. மேலும் இரவு நேரத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீடுகளுக்குள் புகுந்து எங்களை அச்சப்படுத்துகின்றன.
கால்வாய் வசதி இல்லாததால் சாக்கடை கழிவுகள் தெருககளில் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து எங்கள் பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் பகுதி மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.