சுற்றுலாவை வளர்க்க மதுபார்களை அனுமதிப்பது மாநில அரசின் முடிவு: அல்போன்ஸ் கன்னன்தானம் பேட்டி
கேரளாவில் சுற்றுலாவை வளர்க்க மதுபார்கள் தேவையா? இல்லையா? என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இருந்து பா.ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு யாரும் தேர்வாகவில்லை. இதனால் கேரளாவுக்கு மத்திய மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி, மந்திரி சபையில் மாற்றம் செய்தார். அப்போது கேரளாவை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கன்னன்தானத்திற்கு சுற்றுலா மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்ப ராஜாங்க மந்திரி பதவி வழங்கினார். இந்த நிலையில், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் மோடியின் மந்திரி சபையில் மந்திரியாக பொறுப்பேற்க வாய்ப்பு கிடைத்தது மெய்சிலிர்க்க வைத்தது. என்மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்ட பொறுப்பை திறமையுடன் செயலாற்றி பாராட்டு பெறுவேன்.
எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டதின் மூலம் மத்தியில் கேரளாவுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. எனக்கு இந்த துறை ஒதுக்கப்பட்டதால் எந்த வருத்தமும் இல்லை. சுற்றுலா தலங்கள் நிறைந்த கேரளாவில் இருந்து என் பணி தொடங்கும். எனது சொந்த மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான செயல்திட்டங்களை நிறைவேற்றுவேன். சுற்றுலாவை வளர்க்க மதுபார்கள் தேவையா? இல்லையா? அதை அனுமதிக்க வேண்டுமா? என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
கேரளாவை சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுனாளில், ஏமன் நாட்டில் சிறை வைக்கப்பட்டு உள்ளார். தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் அவரை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன். கேரளாவின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் தொடர்பாளனாகவும் நான் செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் இருந்து புதிய மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ள அல்போன்ஸ் கன்னன்தானத்திற்கு கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், அல்போன்ஸ் கன்னன்தானத்தை பல ஆண்டுகளாக தெரியும். நெருங்கிய நண்பரான அவருக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைத்து இருப்பதை வரவேற்கிறேன். அவரோடு இணைந்து மாநில அரசின் வளர்ச்சிக்கு செயல்பட தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.