மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து விட்டது அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேச்சு


மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து விட்டது அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து விட்டது என்று தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுகூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.சி.சண்முகையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.ஜெயதுரை, முத்தையாபுரம் பகுதி செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் லிங்கராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அனைத்து கட்சி தலைவரையும் சந்திக்கும் ஒரே தலைவர் கலைஞர் தான். கலைஞருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை. அதே போன்று கரைபடாத கைக்கு சொந்தக்காரராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் சுற்றி சுற்றி பாதுகாத்து வருகிறார்.

மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தத்தளித்து கொண்டு இருக்கும் நேரத்தில் நான் வழிகாட்டியாக இருக்கிறேன் என்று தன்னை மாய்த்து கொண்டார் அனிதா. உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் அனைத்திலும் தி.மு.க. வெற்றி பெறும். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும். அதுவும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதில் வெற்றி பெறவில்லை என்றால் நான் அரசியலை விட்டே போய்விடுவேன்.

பா.ஜனதா அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த போது, ஏற்பட்ட கஷ்டம், இங்கு உள்ள வியாபாரிகளுக்கு தெரிந்து இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றன. அவர்களுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து விட்டது. இதனால் அனைவரும் விருப்பு, வெறுப்பு இன்றி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தி.மு.க இயக்கத்தில் இருந்து கொண்டு, அதனை ஒழிக்க நினைத்தால் அது நடக்காது. அவர்களை தூக்கி எறிய தயங்கமாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தூத்துக்குடி முன்னாள் ஒன்றிய செயலாளர் டி.டி.சி.ராஜேந்திரன், இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story