இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான சேவை வரியை கண்டித்து 4 லட்சம் பேரிடம் கையெழுத்து


இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான சேவை வரியை கண்டித்து 4 லட்சம் பேரிடம் கையெழுத்து
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான சேவை வரியை கண்டித்து தஞ்சை கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் 4 லட்சம் பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இந்த கையெழுத்துக்கள் பிரதமர் மோடிக்கு பார்சலில் அனுப்பப்பட்டது.

தஞ்சாவூர்,

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி தஞ்சையில் நிருபர் களிடம் கூறியதாவது:-

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவைவரி) 12.36 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தாமதமாக செலுத்தப்படும் பிரீமியம் மீதான சேவைவரியோடு தாமத கட்டணத்திற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் பிரீமியம் மீது உலகில் எந்த நாட்டிலும் சேவை வரி கிடையாது. எனவே இந்த சேவை வரியை விலக்கி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்திட தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.

இந்த வரியை ஏற்க முடியாது என்பதோடு, மக்களின் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமையாகவே பார்க்க வேண்டி உள்ளது. இது மக்களிடையே சேமிக்கும் ஆர்வத்தை குறைக்க வழிவகுக்கும். எனவே மக்களின் கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் தஞ்சை கோட்டத்தில் மட்டும் 42 நாட்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 504 கையெழுத்துக்கள் பெறப்பட்டன. பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர் ஒத்துழைப்போடு இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

தென்மண்டல அளவில் 22 லட்சத்திற்கும் அதிகமாக கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

விலக்கி கொள்ள வேண்டும்

இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரகாஷ்கரத், வரதராஜன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், எம்.பி.க்கள் திருச்சி சிவா (தி.மு.க.), குமார், பாரதிமோகன் (அ.தி.மு..க) உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்களை பிரதமருக்கு அனுப்புகிறோம். எனவே மக்களின் கருத்தை உணர்ந்து இந்த வரியை பிரதமர் மோடி விலக்கிக்கொள்ள வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தஞ்சை கோட்ட காப்பீட்டுக்கழக பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ரவிசங்கர், இணை செயலாளர் சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் தஞ்சை கோட்ட காப்பீட்டுக்கழகம் சார்பில் பெறப்பட்ட 4 லட்சத்து 16 ஆயிரத்து 504 கையெழுத்துக்கள் அடங்கிய படிவங் களை பார்சலில் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story