டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தொரப்பாடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

வேலூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டன. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை, தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகளில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. வேலூர் தொரப்பாடியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையும் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டது. இந்த நிலையில் அந்த இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட இருக்கும் இடத்திற்கு திரண்டு சென்றனர். அங்கு கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story