வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்


வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நேற்று தூத்துக்குடியிலுள்ள துறைமுகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் துறைமுகத்தை கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி துறைமுக வளாகத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் நடராஜன், துறைமுக செயலாளரும், கணக்கு அதிகாரியுமான சாந்தி, போக்குவரத்து அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாலையில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பொதுமக்களுக்கு அனுமதி

மேலும் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலையில் பொதுமக்கள் துறைமுகத்துக்கு வந்தனர். அவர்கள் உரிய சோதனைக்கு பிறகு துறைமுகத்துக்குள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் துறைமுகத்தில் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி, இறக்குவதை பார்வையிட்டு ரசித்தனர். சிறுவர்கள் ஆர்வத்துடன் கப்பல்களிலும் ஏறி பார்வையிட்டனர். 

Related Tags :
Next Story