பள்ளி முன்பு தேங்கியுள்ள தண்ணீரால் அவதி; மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


பள்ளி முன்பு தேங்கியுள்ள தண்ணீரால் அவதி; மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 5 Sep 2017 9:46 PM GMT)

நல்லம்பள்ளி அருகே மேல்பூரிக்கல்லில் பள்ளி முன்பு தேங்கி உள்ள தண்ணீரால் அவதிப்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மேல் பூரிக்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் உள்ளன. இங்குள்ள பள்ளி முன்பு உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் மாணவ-மாணவிகள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் குளம் போல் பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரில் கொசு புழு அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் மாணவ- மாணவிகள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை பள்ளி முன்பு தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும், சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பள்ளி முன்பு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பள்ளி முன்பு உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதாலும், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததாலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story