நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஓசூரில் ரெயில் மறியல் போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஓசூரில் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 5 Sep 2017 9:46 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஓசூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் என 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஓசூரில் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஓசூர் ரெயில் நிலையத்தில் முதலாவது மற்றும் 2-வது பிளாட்பாரத்தில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் நாகராஜ், துணைத் தலைவர் ஆதில் உள்பட 14 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஓசூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், எம்.ஜி. ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வாஜித் பாஷா, பொதுச்செயலாளர் அஸ்கர் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் தலைமை தபால் அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். அதையொட்டி அந்த கட்சியினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம், அட்கோ இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் ரெயில் மறியல் போராட்டத்தில் கைதான 14 பேர் மற்றும் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக கைதான 19 பேர் என 33 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஓசூரில் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கவுரிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story