மின்னல் தாக்கியதில் வெடிமருந்து வெடித்து குடோன் தரைமட்டம்


மின்னல் தாக்கியதில் வெடிமருந்து வெடித்து குடோன் தரைமட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:15 PM GMT (Updated: 5 Sep 2017 9:51 PM GMT)

தோகைமலை அருகே மின்னல் தாக்கியதில் வெடிமருந்து வெடித்து குடோன் தரைமட்டமானது. இதில் காவலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சி கம்பக்காம் பாறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 32). இவர் அரசு அனுமதி பெற்று கம்பக்காம்பாறை அருகே 2 கிலோ மீட்டர் சுற்றுப்புறத்தில் வீடுகள் இல்லாத இடத்தில் வெடிமருந்து குடோன் வைத்து நடத்தி வந்தார். வெளிமாநிலங்களில் இருந்து வெடிமருந்துகளை கொண்டு வந்து, இந்த குடோனில் வைத்து கரூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வினியோகம் செய்து வந்தார்.

இந்த குடோனில் மொத்தம் 3 அறைகள் இருந்தன. அதில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகையான வெடிமருந்துகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் வெடிமருந்து குடோனில் ஆயிரத்து 350 ஜெலட்டின் குச்சிகள், 6 ஆயிரத்து 3 எலக்ட்ரானிகல் டெட்டனேட்டர்கள் உள்பட வெடிபொருட்கள் மற்றும் 1,632 மீட்டர் திரி ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தோகைமலை போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான வெடிமருந்துகளை பறிமுதல் செய்து இந்த குடோனில் வைத்திருந்தனர்.

இந்த குடோனில் பிச்சை (55) என்பவர் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சாப்பிட சென்றார். அப்போது தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பிச்சை, வெடிமருந்து குடோனுக்கு வர முடியாமல் வீட்டிலேயே தங்கிவிட்டார். இந்தநிலையில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டு இருந்த குடோன் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் குடோனில் இருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோனும் தரைமட்டமானது. இடியுடன் கனமழை பெய்ததால் வெடி சத்தம் பொதுமக்களுக்கு தெரியவில்லை. நேற்று காலை பிச்சை வெடிமருந்து குடோனுக்கு சென்று பார்த்தார். அப்போது கட்டிடம் தரைமட்டமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பிச்சை தொலைபேசி மூலம் மோகன்ராஜிக்கு தகவல் தெரிவித்தார். மோகன்ராஜ் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜ், தாசில்தார் அருள், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் முத்துக்குமார், புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் பாலன்மணி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் கரூர், திருச்சி மாவட்ட வெடிமருந்து நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, தரைமட்டமாக கிடந்த கட்டிடத்தை அகற்றி அதில் வெடிக்காமல் இருந்த வெடிமருந்துகளை சேகரித்தனர். அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெடிமருந்துகள் வெடிக்காமல் இருக்க வெடி மருந்துகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து சேகரிக்கப்பட்ட வெடிமருந்துகளை தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வெடிமருந்துகளை கைப்பற்றி தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த போது காவலாளி பிச்சை குடோன் அருகே இருந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். வெடித்து சிதறிய குடோனின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த இடிதாங்கி அரை கிலோ மீட்டருக்கு அப்பால் கிடந்தது. இடிதாங்கி வைத்திருந்தும் கட்டிடத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story