திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு, உண்ணாவிரதம்


திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு, உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய இருப்பதை கண்டித்து, திருச்சி காந்தி மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதற்கு தொடக்கம் முதலே வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கள்ளிக்குடியில் புதிதாக மத்திய வணிக வளாகம் கட்டும் பணி முடிந்ததும், சில நாட்களுக்கு முன் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபார கடைகள் உடனடியாகவும், அடுத்த கட்டமாக சில்லறை வியாபார கடைகளும் கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான திட்டத்தை அறிவித்தார்.

இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய உள்ள தமிழக அரசின் திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்து அறிவித்தனர்.

இந்த முடிவின்படி திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார்.

திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். காந்திமார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து சங்கங்களை சேர்ந்த ஸ்ரீதர், கமலக்கண்ணன், ஹக்கீம், காதர், மணி, பாபு, ராஜா முகமது, கருப்பையா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

உண்ணாவிரத போராட்டத்தில் கோவிந்தராஜுலு பேசும்போது, “வரலாற்று சிறப்புமிக்க காந்திமார்க்கெட்டில் சுமார் 2 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டை நம்பி வியாபாரிகள், கடை ஊழியர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் என சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த மார்க்கெட்டை திடீரென எந்தவித வசதியும், பாதுகாப்பும் இல்லாத கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் 10 அடி அகலம், 10 அடி நீளம் உள்ள கடைகளில் வியாபாரம் செய்ய முடியாது. எனவே மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும், இல்லையென்றால் வியாபாரிகள் தொடர் போராட்டம் நடத்துவார்கள்” என்றார்.

காந்தி மார்க்கெட்டில் உள்ள தக்காளி, கத்தரிக்காய் உள்பட நாட்டு காய்கறிகள் கடை, பீட்ரூட், கேரட் உள்பட இங்கிலீஷ் காய்கறி கடைகள், தேங்காய், உருளைக்கிழங்கு, வெங்காய மண்டி, பூ மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன.

மூடப்பட்ட கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்களும் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டத்தினால் நேற்று காந்திமார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வந்த குடும்ப பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.


Related Tags :
Next Story