டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 20 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சொகுசு விடுதிக்கு திரும்பினர்
டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 20 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சொகுசு விடுதிக்கு திரும்பினர். வெற்றிவேல் எம்.எல்.ஏ. தலைமையில் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
புதுச்சேரி,
முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி– ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததற்கு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து அரசுக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதன்பின் வெற்றிவேல் தவிர மற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவை வந்து சின்ன வீராம்பட்டினத்தில் கடற்கரையையொட்டி உள்ள சொகுசு விடுதியில் தங்கினர். சில நாட்கள் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினர். அவர்களுடன் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோரும் வந்து சேர்ந்தனர். இதனால் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆனது.
மீண்டும் அவர்கள் சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்கி இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2–ந்தேதி டி.டி.வி. தினகரன் புதுவை வந்து எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். இதற்கிடையே மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வளைக்கவும் முயன்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கூட்டி இருந்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் புதுவை சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அதற்கு ஏற்ப நேற்று முன்தினம் 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அணி தாவலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இதற்கு மாறாக சொந்த ஊர்களுக்கு சென்று இருந்த அவர்கள் மீண்டும் புதுவைக்கே நேற்று திரும்பி வந்தனர். அவர்கள் தங்கி இருந்த சொகுசு விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். நேற்று வெற்றிவேல் எம்.எல்.ஏ.வும் இந்த விடுதிக்கு வந்தார். அவரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்பட 20 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். பழனியப்பன் எம்.எல்.ஏ. மட்டும் பங்கேற்கவில்லை.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் ஏற்கனவே 2 முறை நோட்டீசு அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிப்பதற்காக அவர்கள் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது.