மாணவி அனிதா தற்கொலை: சேலத்தில் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் 20 பேர் கைது


மாணவி அனிதா தற்கொலை: சேலத்தில் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் 20 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2017 9:00 AM IST (Updated: 6 Sept 2017 4:41 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலை எதிரொலியாக சேலத்தில் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

‘நீட்’ தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்திற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே எனக் கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனிமேல் இதுபோன்ற மரணங்கள் ஏற்படக்கூடாது எனக் கூறி மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் மாணவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, அங்கப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் சகுந்தலா மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், கோரிக்கைகளுக்காக நீங்கள் முதலில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தீர்கள். அது ஒன்றும் தவறில்லை. ஆனால் போலீசாரின் அனுமதியின்றி தொடர் போராட்டத்தை கல்லூரி முன்பு நடத்த கூடாது எனக் கூறினர். இதைக்கேட்ட மாணவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 20 மாணவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மாணவர்களை மாலையில் விடுவித்தனர். இந்த போராட்டத்தால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story