புளூவேல் விளையாட்டை செல்போனில் பகிர்வு செய்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
புளூவேல் விளையாட்டை செல்போனில் யாரேனும் பகிர்வு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மாவடட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசியதாவது:–
இணையதளம் மற்றும் நவீன செல்போன்கள் மூலமாக பரவி வரும் புளூவேல் என்னும் கணினி விளையாட்டு 13 வயது முதல் 25 வயதுகள் வரையிலான வளர் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள், அதிகஅளவில் இணையதளம் உபயோகிக்கும் குழந்தைகள், இணையதளம் விளையாட்டுகளை அதிக நேரம் விளையாடும் குழந்தைகள் ஆகியோரை பாதிப்படைய செய்து உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் இணையதள பயன்பாடுகளை ஆசிரியர்கள் கூர்ந்து கண்காணித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதிக நேரம் இணையதளத்தில் விளையாடுகிறார்களா? இரவு நேரங்களில் தனியாக அல்லது தனி அறையில் அல்லது மொட்டை மாடியில் இணையதளத்தில் விளையாடுகிறார்களா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தற்போது உள்ள குழந்தைகளிடம் தமிழக கலாச்சார விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். யாரிடமும் பேசாமல் தனியாக இருந்தாலோ, குழந்தைகளிடம் வழக்கமான இயல்பு நிலையில் மாற்றம் காணப்பட்டாலோ உடனடியாக கவனித்து சரிசெய்ய வேண்டும்.
குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடவும், மனம் விட்டு பேசவும் வேண்டும். விலை உயர்ந்த மொபைல் போனை வாங்கி கொடுக்கக்கூடாது. இரவு நேரங்களில் குழந்தைகளை அதிக நேரம் கண்விழிக்க வைக்கக்கூடாது. புளூவேல் விளையாட்டை மொபைலில் பகிர்வு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விளையாட்டில் இருந்து குழந்தைகள், மாணவ–மாணவிகளை பாதுகாக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.