28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு கடும் கிராக்கி
மத்திய அரசு பட்டாசுக்கு 28 சதவீதம் வரிவதித்ததால் கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசி பகுதி பட்டாசு ஆலை அதிபர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 800–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தும் 90 சதவீத பட்டாசுகள் இங்கு இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் பேர் இருக்கிறார்கள். பட்டாசு ஆலைகளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் நேரடியாக வேலை செய்து வருகிறார்கள்.
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்தது. இதில் பட்டாசுக்கு 28 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது. மத்திய, மாநில அமைச்சர்களை சந்தித்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இருந்தாலும் வரி குறைக்கப்படவில்லை.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்தமாதம்(அக்டோபர்) 18–ந்தேதி கொண்டாப்படஉள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை கொள்முதல் செய்ய கடந்த சில வாரங்களாக சிவகாசிக்கு வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் இங்குள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை சந்தித்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்க சென்ற போது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் வழக்கமாக வாங்கும் அளவில் பட்டாசுகளை வாங்காமல் 50 சதவீதம் மட்டுமே பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
வடமாநிலங்களில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க வரும் மொத்த வியாபாரிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலைஅதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி விலையை குறைத்து கேட்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு விலையை குறைத்து கொடுக்க முடியாதநிலை இங்குள்ள பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உள்ளது. தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தள்ளுபடி என்ற பெயரில் இங்குள்ள உற்பத்தியாளர்கள் கொடுத்து வருகிறார்கள்.
அரசிடம் உரியஅனுமதி பெற்று பட்டாசுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு செலவுகளும், வரிகளும் உள்ளது. இதனால் அவர்கள் உற்பத்திக்கு ஆகும் செலவு, தொழிலாளர்கள் சம்பளம், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி ஆகியவைகளை கருத்தில் கொண்டு விலைநிர்ணயம் செய்கிறார்கள். இதனால் அவர்களால் ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு கீழ் விலையை குறைக்க முடியாமல் போகிறது. அதே நேரத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள சிலகிராமங்களில் அரசின் அனுமதி இன்றி வீடு, விவசாயநிலங்கள் மற்றும் காட்டுப்பகுதியில் கள்ளத்தனமாக பட்டாசுகளை தயாரித்து குறைந்தவிலைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த பட்டாசுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி வெளிமாநிலங்களுக்கும் செல்வதாக கூறப்படுகிறது. இது போன்ற கள்ளத்தனமாக பட்டாசுகளை தயாரித்து அனுப்பி வைக்கும் நபர்கள் எவ்வித வரியும் அரசுக்கு செலுத்துவது இல்லை. இதனால் அவர்களுக்கு அதிகஅளவில் லாபம் கிடைக்கிறது. அதே நேரத்தில் வெளிமாநில மொத்த வியாபாரிகள் கேட்கும் தொகைக்கு இவர்களால் பட்டாசுகளை விற்பனை செய்ய முடிகிறது. இதனால் தற்போது பல வியாபாரிகள் கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக பலஊர்களில் இடைத்தரகர்களும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளதால் உற்பத்தியும் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பெயரளவுக்கு அனுமதி இன்றி பட்டாசு தயாரித்ததாக சிலர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வீடு மற்றும் வயல்வெளிபகுதியில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிக்கும் போது விபத்து ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்டநிர்வாகம் விதி மீறும் பட்டாசு ஆலைகளை கண்காணிப்பது போல் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் நபர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பலலட்சம் ரூபாய் முதலீடு செய்து தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகளை தயாரித்து வைத்துள்ள பல பட்டாசு ஆலைஉரிமையாளர்கள் கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பட்டாசுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தகவல் கிடைத்து அதிர்ச்சியில் உள்ளனர். இந்தநிலைமாற அரசுக்கு நியாயமான முறையில் வரி செலுத்தும் பட்டாசு ஆலைஉரிமையாளர்கள் தொடர்ந்து தங்களது தொழிலை செய்யவும், இந்த தொழிலைநம்பி உள்ள 8 லட்சம் பேரின் வாழ்வாதாரம் காக்கவும் பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். அதே நேரத்தில் கள்ளத்தனமாக தயாரித்து அனுப்பி வைக்கப்படும் பட்டாசுகளையும் ஒழிக்க வேண்டும் என்பது தான் சமூகஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள்சங்கதலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது;–அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள்அனைத்தும் செலுத்தி விட்டு பட்டாசு ஆலைகளை தொடங்கி உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள 28 சதவீத் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பட்டாசு விற்பனையும் குறைந்துள்ளது.
இந்த நேரத்தில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிக்கும் தொழிலில் தற்போது முன்பை விடஅதிகம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வீட்டில் கணவன், மனைவி மற்றும் சிலர் அமர்ந்து கொண்டு சாதாரணமாக ஒரு நாளைக்கு 15 மணி நேரம் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபடுகிறார்கள். இதனால் பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை விட வீட்டில் அதிகஅளவில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. இதைதடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.