தாசில்தார் அலுவலகம் முன்பு தொழிலாளி, உறவினர்களுடன் காத்திருப்பு போராட்டம்


தாசில்தார் அலுவலகம் முன்பு தொழிலாளி, உறவினர்களுடன் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:15 AM IST (Updated: 7 Sept 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தார் அலுவலகத்தில் தொழிலாளி, உறவினர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஏக்கர் நிலத்தை அரசு இலவசமாக வழங்கியதாக தெரிகிறது. அந்த நிலத்தில் சுப்பிரமணி மற்றும் குடும்பத்தினர் மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்.

 இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் திருப்பூருக்கு சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திை-ரிடம் இது குறித்து கேட்ட போது, அரசு இலவசமாக வழங்கியதற்கான உத்தரவை ரத்து செய்துவிட்டதாகவும், அதன் பின்னரே தாங்கள் அந்த நிலத்தை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 இதையடுத்து தனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் பலமுறை சுப்பிரமணி புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்தில் அவர் தனது குடும்பத்தினருடன் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தரக்கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story