அந்தியூர், பவானி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி பொதுமக்கள் அச்சம்


அந்தியூர், பவானி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:00 PM GMT (Updated: 6 Sep 2017 8:17 PM GMT)

அந்தியூர், பவானி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியானார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25), ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி ஸ்ரீதேவி (20). இவர்களுடைய 4 மாத பெண் குழந்தை கனிகா.

கடந்த 5 நாட்களுக்கு முன் குழந்தை கனிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே சதீஷ் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. அதனால் கனிகா அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது, கனிகாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் குழந்தை கனிகா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை கனிகா பரிதாபமாக இறந்தாள். குழந்தையின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதேபோல் பவானி அருகே டெங்கு காய்ச்சலுக்கு நேற்று 6 வயது சிறுவன் பலியானான். அதன் விவரம் வருமாறு:–

பவானி அருகே உள்ள பெருமாள் மலையை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 38). ஈரோட்டில் கால்நடைத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பத்மா (32). இவர்களுடைய மகன் தீபக் (6).

இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன் தீபக்கிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் கோவிந்தசாமி உடனே மகனை பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது தீபக்கிற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அதனால் உடனே சிறுவன் தீபக் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

டாக்டர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் தீபக் நேற்று காலை பரிதாபமாக இறந்துவிட்டான். தீபக்கின் உடலை பார்த்து அவனுடைய உறவினர்கள் கதறி துடித்தனர்.

அந்தியூர், பவானி பகுதியில் நேற்று காலை 2 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story