அறிவு திறனை வளர்க்க மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.1 கோடியில் புத்தாக்க மையம்


அறிவு திறனை வளர்க்க மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.1 கோடியில் புத்தாக்க மையம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:15 AM IST (Updated: 7 Sept 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க ரூ.1 கோடியில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டு உள்ளதை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் திறந்து வைத்தார்.

நெல்லை,

இந்தியாவில் உள்ள மாணவ–மாணவிகள், இளைஞர்களிடம் உள்ள அறிவு திறனை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க மத்திய அரசு அறிவியல் மையத்தின் மூலம் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அறிவியல் உபகரணங்கள், அறிவுசார்மையங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிர்வாக இயக்குனர் அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். பெங்களூர் அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் காப்பாட்சியர் மதனகோபால் வரவேற்று பேசினார். நெல்லை மனேர்னமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தாக்க மையத்தை திறந்து வைத்து பேசினார்.

இந்த புத்தாக்க மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சியில் ஆற்றில் தண்ணீர் குறைவான காலத்தில் எப்படி தண்ணீரை சேமிப்பது என்பதை விளக்கக்கூடிய நீர் மூழ்கி தடுப்பணை, வனபகுதியை விட்டு வனவிலங்குகள் வீட்டு பகுதிக்குள் வந்தால் எச்சரிக்கை செய்யும் கருவி, கண்காணிப்பு கேமிரா, குடிபோதையில் இருப்பவர் வாகனத்தை ஓட்ட முயன்றால் அந்த வாகனம் ஓடாது. திருடர்கள் வந்தால் எச்சரிக்கை செய்யும் கருவி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.

இது குறித்து பெங்களூர் அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் காப்பாட்சியர் மதனகோபால் கூறியதாவது:–

மத்திய அரசு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் அறிவுத்திறனை வளர்க்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்று அறிவித்து பல்வேறு இடங்களில் அறிவுசார்மையங்கள், அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய புத்தாக்க மையம் உள்ளிட்டவைகளை திறந்து பயிற்சி அளித்து வருகிறது.

மத்திய அரசு 2020 என்ற திட்டத்தின் கீழ் அனைவருடைய அறிவு திறனையும் வெளிக்கொண்டு வந்து அவர்களால் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் 137– வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா 3–வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது எனவே இந்தியாவும் கண்டுபிடிப்புகளில் முதலிடத்திற்கு வருவதற்கு நமது இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்று இந்த திட்டத்தை விரைவு படுத்தி வருகிறது.

தென்இந்தியாவில் இந்த புத்தாக்க 7 மையங்களில் உள்ளன. பெங்களூர், திருப்பதி, கோழிக்கோடு, குல்பர்க்கா, நெல்லை ஆகிய 5 இடங்களில் மத்திய அரசின் சார்பிலும், சென்னை, கோவையில் மாநில அரசின் சார்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கு வங்களாத்தில் புருலியா என்ற இடத்தில் வேளாண்மை குறித்த பயிற்சி மையமும் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story