இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு பள்ளி ஆசிரியை மகனுடன் திடீர் தர்ணா


இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு பள்ளி ஆசிரியை மகனுடன் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 7 Sept 2017 5:30 AM IST (Updated: 7 Sept 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி திண்டிவனம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியை தனது மகனுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டிவனம்,

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளையில், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக் கோரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரு அரசு பள்ளி ஆசிரியை, தனது மகனுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவருடைய மனைவி சபரிமாலா(வயது 35). மகன் ஜெயசோழன்(7).

சபரிமாலா ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஜெயசோழன் 2–ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில், நேற்று சபரிமாலா தனது மகனுடன் பள்ளிக்கு சென்றார். அப்போது, திடீரென பள்ளி வளாகத்தில் சபரிமாலாவும், அவரது மகன் ஜெயசோழனும் அமர்ந்து இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் கையில் இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகை கையில் ஏந்தி இருந்தனர். அவர்களிடம் சக ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த ரோசணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது, கல்வி மற்றும் போலீஸ் அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர்.

இதனை ஏற்ற ஆசிரியை அனுமதி வாங்கிவருவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story