புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் பெற அலைமோதிய கூட்டம்


புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் பெற அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2017 10:45 PM GMT (Updated: 6 Sep 2017 9:31 PM GMT)

பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் பெற புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் நேற்று முதல் வாகன ஓட்டிகள், தங்களது அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாகன ஓட்டிகள் பழகுனர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கூட்டம் அலை மோதியது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்கு வரத்து அலுவலர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலும், அறந்தாங்கி பகுதி அலுவலகத்தில் அனிதா தலைமையிலும், இலுப்பூர் பகுதி அலுவலகத்தில் அசோக்குமார் தலைமையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பழகுனர் ஓட்டுனர் உரிமம்

இதில் நேற்று மட்டும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 230–ம், அறந்தாங்கியில் 55–ம், இலுப்பூரில் 73 என மொத்தம் 358 பழகுனர் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பழகுனர் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்கள் வரை செல்லத்தக்கது. இந்த உரிமம் பெற்று ஒரு மாதத்திற்கு பின் அசல் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 40 முதல் 50 பழகுனர் ஓட்டுனர் உரிமம் வழங்கி வந்த நிலையில் நேற்று மட்டும் 230 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story