‘நீல திமிங்கலம்’ விளையாடாதீர்கள் இணையதளத்தை கல்வி வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்
மாணவர்கள் ‘நீல திமிங்கலம்’ விளையாடதீர்கள் எனவும், இணையதளத்தை கல்வி வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுரை வழங்கினார்.
கரூர்,
இணையதளத்தில் ‘நீல திமிங்கலம்’ எனும் விளையாட்டால் இளைஞர்கள், மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த விளையாட்டை யாரும் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ‘நீல திமிங்கலம்’ விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூரில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:–
நீல திமிங்கலம் எனும் விளையாட்டு ஆபத்தாக உள்ளது. மாணவ–மாணவிகள் நீல திமிங்கல விளையாட்டை விளையாடாதீர்கள். செல்போன், கணினி மற்றும் இணையதளம் போன்ற மின்னனு சாதனங்களை கல்வி வளர்ச்சி போன்ற நல்லவற்றிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நீல திமிங்கலம் போன்ற விளையாட்டை விளையாடி மன அழுத்தத்திற்கு ஆளாக கூடாது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறும் கருத்துக்களை மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விளையாட்டை விளையாடும் மாணவ–மாணவிகள் தொடக்க நிலையில் இருந்தால் அதில் இருந்து வெளியேறிவிடுங்கள். இந்த விளையாட்டை மறந்து அனைவரும் கல்வியை நன்கு படித்து, ஒவ்வொருவரும் நாட்டின் தூண்களாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பேசுகையில், ‘‘முகம் தெரியாத நபர்களுடன் இணையதளத்தில் உரையாட வேண்டாம். குழந்தைகள் தனிமையில் இருக்கும் போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். உலகத்திலேயே பாசமான சூழ்நிலையை கொண்ட நாடு நமது நாடுதான். உடலுக்கு வலுசேர்க்கும் வகையிலான விளையாட்டை விளையாடுங்கள். செல்போன் மற்றும் இணையதளங்களில் விளையாடுவதை மாணவ–மாணவிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மனநல பாலமுருகன், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) மனோகரன் மற்றும் அதிகாரிகள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.