புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது பக்தர்கள் குவிகின்றனர்


புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது பக்தர்கள் குவிகின்றனர்
x
தினத்தந்தி 6 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-07T03:20:17+05:30)

புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா பெரிய தேர் பவனி இன்று நடைபெறுவதையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிகின்றனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளில் ‘லூர்து நகர்‘ என்ற பெருமையுடன் அன்னை மரியாள் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக வேளாங்கண்ணி புனித மாதா பேராலயம் விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா‘ என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு தேர்பவனி நடைபெற்று வருகிறது. பேராலயத்தில் இருந்து தொடங்கும் தேர் பவனி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைகிறது.

பெரிய தேர் பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்றும் (வியாழக்கிழமை), அன்னையின் பிறந்தநாள் விழா நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இன்று இரவு 7.30 மணியளவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னை மாதா எழுந்தருளி பவனி நடைபெறும். அதற்கு முன்னதாக பேராலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைலமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

பின்னர் பெரிய தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைகிறது. அப்போது அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மரியே வாழ்க என்று கோஷம் எழுப்புவார்கள். இந்த பெரிய தேர்பவனியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பக்தர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவேண்டி புதிய மாதா பேராலயத்தில் இருந்து மண்டியிட்டு பழைய பேராலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்கின்றனர். விழா நாட்களில் தினமும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும், விழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பழைய மாதா கோவில், தியான மண்டபம் உள்ளிட்டவை மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. 

Related Tags :
Next Story