சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முகாம்


சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முகாம்
x
தினத்தந்தி 7 Sept 2017 5:15 AM IST (Updated: 7 Sept 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சொகுசு விடுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

புதுச்சேரி,

தமிழக முதல்–அமைச்சர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

அதன்பின் புதுவை வந்த அவர்கள் வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதி, நட்சத்திர ஓட்டல் என மாறிமாறி தங்கியுள்ளனர். அவர்களுடன் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோரும் புதுவை வந்து தங்கினார்கள். இதன்பின் சொந்த ஊர்களுக்கு அவர்கள் சென்றனர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கூடாரம் காலியாவதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார். ஆனால் அந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் புதுவைக்கு வந்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வந்து அவர்களுடன் வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை சென்றனர். மற்ற எம்.எல்.ஏ.க்கள் புதுவை சொகுசு விடுதியிலேயே தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தினகரன் தனது முடிவை அறிவிக்கும் அவர்கள் இங்கேயே தங்கி இருப்பார்கள் என்று தெரிகிறது.


Next Story