நிதி நெருக்கடியால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை அமைச்சர் கந்தசாமி வேதனை


நிதி நெருக்கடியால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை அமைச்சர் கந்தசாமி வேதனை
x
தினத்தந்தி 6 Sep 2017 11:01 PM GMT (Updated: 6 Sep 2017 11:01 PM GMT)

நிதி நெருக்கடியால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

பாகூர்,

பாகூர் அருகே சேலியமேடு கிராமத்தில் சுவாமி விவேகானந்தர் கிராம முன்னேற்றச் சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியை பாப்பம்மாள் வரவேற்றார். விவேகானந்தர் கிராம முன்னேற்ற சங்க கவுரவ தலைவர் புலவர் அரிகரன் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர் ராமலிங்கம், பொருளாளர் காளமேகம், ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் குடிநீர் சுத்தி கரிப்பு கருவியின் பயன்பாட்டை தொடங்கி வைத்தும், ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கியும் அமைச்சர் கந்தசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திறமைகளை வளர்க்க வேண்டும்

நாட்டின் முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு கவனமாக படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளது. அந்த வேலைவாய்ப்புகளை பெற இளைஞர்கள் தங்களின் கல்வி, ஒழுக்கம், பொது அறிவு மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் இருந்து கிளம்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய சிந்தனையுடன் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். வீட்டில் உள்ள பிரச்சினைகளை நினைத்துக்கொண்டு வந்தால், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாது.
மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகள் தவிர்த்து ஏராளமான தொழில் படிப்புகளும் உள்ளன. எந்த பணி கிடைத்தாலும், அந்த பணிக்கு செல்ல இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.

புதுச்சேரி அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. இலவச வேட்டி-சேலைக்கு பணம் கொடுக்க முடியவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை எழுந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டதால் கலால் வரி குறைந்துள்ளது. பத்திரபதிவு நிறுத்தம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், பொது இடங்கள், வீடுகளில் மரம் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்று மரங்களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story