பல்லாவரத்தில் நில அளவீட்டு பணி தொடங்கியது பலத்த போலீஸ் பாதுகாப்பு


பல்லாவரத்தில் நில அளவீட்டு பணி தொடங்கியது பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Sept 2017 5:00 AM IST (Updated: 7 Sept 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரத்தில் நில அளவீட்டு பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஜமீன் பல்லாவரம், மாமல்லபுரம், பல்லாவரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட 17 இடங்கள் புராதன பகுதிகள் என்பதால், அங்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், பழைய கட்டிடங்களை பழுது பார்க்கவும் தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் தடையை நீக்கக்கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

தடை செய்யப்பட்ட பகுதியில் நிலஅளவீடு செய்து எல்லையை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தொல்லியல் துறையினர் நிலஅளவீடு செய்ய வரும்போது அவர்களை பொதுமக்கள் தடுத்ததால், அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் 3 நாட்களில் தொல்லியல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு அளவீடு பணியை செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாம்பரம் ஆர்.டி.ஓ. எஸ்.சந்திரசேகரன் தலைமையில் வருவாய்த்துறையினர், தொல்லியல்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பழைய பல்லாவரம் பகுதியில் நில அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு ஏற்படாததால், அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்றும், ஆய்வு அறிக்கை 14-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story