மும்பையில் ஆனந்த சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்
மும்பையில் ஆனந்த சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 40 ஆயிரம் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
மும்பை,
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கடந்த 25–ந் தேதி தொடங்கியது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. வீதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. 11 நாட்களாக பக்தி பரவசத்துடன் பூஜைகள் நடைபெற்றன.லால்பாக் ராஜா, ஜி.எஸ்.பி. மண்டல் உள்ளிட்ட பல முக்கிய மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகரை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் 1½, 3, 5 மற்றும் 7–வது நாளில் கடல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நேற்று முன்தினம் ஆனந்த சதுர்த்தியுடன் முடிந்தது. ஆனந்த சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் மதியம் முதலே மும்பையில் உள்ள எல்லா சாலைகளிலும், விநாயகர் சிலைகளின் ஊர்வலமாகவே காட்சி தந்தது.டோல் உள்ளிட்ட இசை வாத்தியங்களின் சத்தம் விண்ணை பிளந்தது. வண்ணப்பொடிகளை தூவியும், ஆடிப்பாடியும் உற்சாகமாக விநாயகரை வழி அனுப்பினர். ‘கண்பதி பப்பா மோரியா’ என்ற முழக்கத்தால் ஒட்டு மொத்த மும்பையே அதிர்ந்தது.
ஆனந்த சதுர்த்தியையொட்டி தாதர் சிவாஜி பார்க், ஜூகு, வெர்சோவா, கிர்காவ், மார்வே கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். குறிப்பாக லால்பாக் ராஜா உள்ளிட்ட முக்கிய மண்டல்களின் ஊர்வலத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.லால்பாக் ராஜா விநாயகர் சிலை 20 மணி நேர ஊர்வலத்திற்கு பிறகு கிர்காவ் கடற்கரை வந்தடைந்து கரைக்கப்பட்டது. இதேபோல ஏராளமான விநாயகர் சிலைகள் கிர்காவ் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன. கடற்கரை தவிர சிலைகளை கரைக்க வசதியாக தாதர் மேயர் பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர குளங்களிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைத்து சென்றனர். பவாய் ஏரியிலும் திரளான மக்கள் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 7 மணி வரை ஆனந்த சதுர்த்தியின் போது மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 7 ஆயிரம் பிரமாண்ட விநாயகர் சிலைகளும், வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 33 ஆயிரம் சிலைகளும் என மொத்தம் 40 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்கரைகளில் 607 உயிர்காக்கும் வீரர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். கடற்கரை பகுதிகளில் நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடற்கரைகளில் திரண்ட கூட்டம் கண்காணிப்பு கேமரா, ஹெலிகாப்டர் மற்றும் குட்டி விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.ஆனந்த சதுர்த்தியையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதனால் மும்பையில் ஆனந்த சதுர்த்தி விழா அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.