சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேசின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேசின் உடலுக்கு முதல்–மந்திரி சித்தராமையா உள்பட மந்திரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு,
சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேசின் உடலுக்கு முதல்–மந்திரி சித்தராமையா உள்பட மந்திரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த கவுரி லங்கேஷ்(வயது55) நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மதியம் 1 மணியளவில் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உடல் ஜே.சி.ரோட்டில் உள்ள ரவீந்திர கலாஷேத்ரா வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு உடலை பார்த்து அவருடைய தாயார் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முதல்–மந்திரி சித்தராமையா நேரில் வந்து அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.
மந்திரிகள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், டி.கே.சிவக்குமார், உமாஸ்ரீ, ஆஞ்சனேயா உள்பட முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கன்னட திரையுலகை சேர்ந்தவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று காலையிலேயே விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் கவுரி லங்கேசின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவர் இறுதி வரை உடன் இருந்தார்.அதைத்தொடர்ந்து பகல் 3.30 மணியளவில் கவுரி லங்கேசின் உடல் ரவீந்திர கலாஷேத்ராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாம்ராஜ்பேட்டையில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு முதல்–மந்திரி சித்தராமையா, மந்திரிகள் ரமேஷ்குமார், உமாஸ்ரீ, ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல் அடக்கம் செய்தபோது கொலையை கண்டித்து அங்கு கூடி இருந்தவர்கள் முழக்கமிட்டனர்.
கவுரி லங்கேசின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு அவரது உடல் எந்த சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் வைக்கப்பட்டிருந்த ரவீந்திர கலாஷேத்ராவிலும், சுடுகாட்டிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கண்கள் தானம்தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாக கவுரி லங்கேஷ் தனது குடும்பத்தினரிடம் கூறி இருக்கிறார். அதன்படி அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ‘மின்டோ‘ ஆஸ்பத்திரிக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு வந்து கவுரி லங்கேசின் கண்களை எடுத்துச் சென்றனர். கண்களை தானமாக பெற்றதற்கான சான்றிதழை டாக்டர்கள் அவரது சகோதரர் இந்திரஜித்திடம் வழங்கினர்.