‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா


‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா
x
தினத்தந்தி 8 Sept 2017 5:45 AM IST (Updated: 8 Sept 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய அரசு பள்ளி ஆசிரியை விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிற நிலையில் இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரியும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை தனது ராஜினாமா கடிதத்தை கல்வித்துறை அதிகாரியிடம் கொடுத்தார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் மயிலத்தில் ரெயில்வே ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சபரிமாலா (வயது 35). இவர் ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றி வரும் அதே பள்ளியில் அவரது மகன் ஜெயசோழன் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியை சபரிமாலா தனது மகன் ஜெயசோழனுடன் பள்ளி முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது பற்றி தகவல் அறிந்த ரோசணை போலீசார் விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்றனர். இதையடுத்து அவர் மதியம் தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்த ஆசிரியை சபரிமாலா, யாருமே எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

‘நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஆசிரியராக தமிழக கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காகவே எனது மகன் ஜெயசோழனை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறேன்.

இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்தை ஒரு ஆசிரியராக ‘கல்வி எழுச்சி’ கொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில் எனது வெளிப்பாட்டை தன்னெழுச்சியை நேற்றைய தினம் (அதாவது நேற்று முன்தினம்) காலை 9.30 மணியளவில் எனது பள்ளிக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்க தொடங்கினேன். அனுமதி இல்லாமல் போராட்டம் தொடரக்கூடாது என்றதும் மதியம் 1.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதி வழங்கவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்வி பிரச்சினைக்காக குரல் எழுப்பியது குற்றம் என்று சொல்கிறது சட்டம். சம்பளத்திற்காக ஆசிரியர்கள் போராடும்போது சமத்துவம் கொண்ட கல்விக்காக ஒரு ஆசிரியர் போராடக்கூடாது என்பது மிகுந்த வேதனையை தருகிறது. எனவே என்னுடைய வேலையை விட எனக்கு தேசம் முக்கியம் என்பதால் என் ஆசிரியர் பணியை இன்று வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், எந்தவொரு தகவலும் தெரிவிக்காமலும், முன் அனுமதியின்றியும் பள்ளிக்கு வெளியில் ஆசிரியை சபரிமாலா போராட்டம் நடத்தியுள்ளார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டத்தை கைவிட்டுள்ளார். இதுபற்றி உதவி தொடக்க கல்வி அலுவலர் ஏழுமலை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அந்த விசாரணை அறிக்கை தொடக்க கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அந்த ஆசிரியை மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனிடையே தற்போது ஆசிரியை ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இந்த கடிதமும் தொடக்க கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய ஆசிரியை, தனது ராஜினாமா கடிதத்தை கல்வித்துறை அதிகாரியிடம் கொடுத்துள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story