முறையான பராமரிப்பு இல்லாததால்தான் மேற்கூரை இடிந்து விழுந்தது பொதுமக்கள் குற்றச்சாட்டு


முறையான பராமரிப்பு இல்லாததால்தான் மேற்கூரை இடிந்து விழுந்தது பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Sept 2017 4:45 AM IST (Updated: 8 Sept 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

முறையான பராமரிப்பு இல்லாததால்தான் மேற்கூரை இடிந்து விழுந்தது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

கோவை,

சோமனூர் பஸ்நிலையத்தில் திரண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சோமனூர் பஸ்நிலையம் கடந்த 1998-ம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும். அதை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்து, கட்டிட சுவர் வெடிப்பு விழுந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து தொடர்ந்து நாங்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன் இதுகுறித்து கலெக்டரிடமும் புகார் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டில் அங்கு பராமரிப்பு பணி நடந்தது. அப்போது, வெடிப்பு விழுந்த சுவரைக்கூட அவர்கள் சரிவர பூசவில்லை. அதற்கு மேல் வர்ணம் பூசிவிட்டதால், அது பளிச்சென்று காணப்பட்டது.

அதுபோன்று பஸ்நிலையத்தின் உள்பகுதியில் கான்கிரீட்டால் ஆன தரைத்தளம் போடப்பட்டது. அதுவும் சரியாக போடாததால் அடிக்கடி குழிகள் ஏற்பட்டது. அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சரிசெய்தனர். அப்போதே நாங்கள், இந்த கட்டிடம் அனைத்தும் பழுதாகி இருக்கிறது. அதை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் அந்த கட்டிடத்தின் மேல்பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. அது வெளியே செல்ல வழியில்லை என்பதால், ஒழுகிக்கொண்டே இருந்தது. அதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவர்கள் அந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த தண்ணீர் அனைத்தும் மேற்கூரைக்குள் புகுந்து, ஈரப்பதத்துடன் காணப்பட்டது.

ஏற்கனவே அந்த கட்டிடம் கட்டப்பட்டு 18 வருடங்கள் ஆனதாலும், ஈரப்பதம் அதிகமாக இருந்ததாலும், திடீரென்று மேற்கூரையின் ஒருபகுதி இடிந்ததால், ஒட்டுமொத்தமாக மேற்கூரை அனைத்தும் இடிந்து கீழே விழுந்துவிட்டது. மழை பெய்தபோது, அந்த பஸ்நிலைய கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்று, மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து இருந்தால், அந்த தண்ணீர் அனைத்தும் வெளியேறி இருக்கும். இந்த விபத்தும் நடந்து இருக்காது. எனவே முறையான பராமரிப்பு இல்லாதுதான் இந்த விபத்துக்கு காரணம். இனியாவது அந்த கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story