மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சாலைமறியல்


மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி தலைமை தாங்கினார். இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை சங்க பொருளாளர் லோக மணிகண்டன் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பிறகு அவர்கள் மறியல் செய்ய முற்பட்டபோது அவர்களை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கைது செய்யப்பட்ட 150 பேர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

குமாரபாளையம் தாலுகா அலுவலக நுழைவுவாயிலில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் தொடர்பாளர்கள் குமார், இளையராஜா, பாலவிநாயகம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் 109 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பரமத்தி வேலூர்- திருச்செங்கோடு

பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 96 பேரை பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்து, ஒரு தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

திருச்செங்கோடு உதவி கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் ரோட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. உடனடியாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 227 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சேந்தமங்கலம்-கொல்லிமலை

சேந்தமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். அப்போது மறியலில் ஈடுபட முயன்ற 41 பெண்கள், 14 ஆண்கள் என 55 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கொல்லிமலை வாழவந்திநாட்டில் செம்மேடு பஸ் நிலையம் அருகே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சுதாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மறியலில் ஈடுபட முயன்ற 76 ஆண்கள், 79 பெண்கள் என மொத்தம் 155 பேர் கைது செய்யப்பட்டு வல்வில் ஓரி அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில்

இதேபோல் நாமக்கல்லில் நடந்த சாலைமறியலில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 1,092 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story