பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். மேலும் அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

ஈரோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் இரவில் சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர், தன்னுடைய வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் கலெக்டர் ரோகிணி, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர் பேசினார்.

மனுக்கள் வாங்கினார்

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வீட்டில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது அவரை உருக்காலை பாதுகாப்பு குழுவினர் சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அதில், ‘சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பது என கடந்தாண்டு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனால் உருக்காலை தொழிலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு, சேலம் உருக்காலை தனியார் மயத்திற்கான மத்திய அரசின் முயற்சியை தடுத்திடவும், தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை வாங்கி கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார். 

Next Story