எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, கல்வித்துறை, விளையாட்டு துறை உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஒவ்வொரு துறை சார்பாகவும் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது;-

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 14-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும். பேரூராட்சிகள் துறையின் சார்பில் பேரூராட்சி பகுதிகளில் நூற்றாண்டு விழா குறித்த நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சுகாதாரத்துறையுடன் இணைந்து அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

ஊராட்சிகளுக்குள் அலங்கார ஊர்திகள் எந்தெந்த வழித்தடங்களில் செல்ல வேண்டும் என்பது குறித்த அறிக்கையை ஊராட்சிகள் உதவி இயக்குனர் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும். விழாவை விளம்பரப்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்துவதுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து, கையுந்துப்பந்து, கபடி, கோ-கோ, நீச்சல் போன்ற விளையாட்டு போட்டிகளை ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனியாக மாவட்ட விளையாட்டு அலுவலர் நடத்த வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story