தூத்துக்குடியில் அலங்கார வளைவுகள் குறித்த புகார்: கோர்ட்டு நியமித்த ஆணையர் ஆய்வு


தூத்துக்குடியில் அலங்கார வளைவுகள் குறித்த புகார்: கோர்ட்டு நியமித்த ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் மீதான புகார் குறித்து கோர்ட்டு நியமித்த ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆறுமுகநயினார் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவரை வரவேற்று தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன.

இது குறித்து மக்கள் மேம்பாட்டு கழக அமைப்பாளர் வக்கீல் அதிசயகுமார், சமூக ஆர்வலர் விஜயன் ஆகியோர் மாவட்ட முதன்மை உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், அலங் கார வளைவுகள் சாலைகளை சேதப்படுத்தியும், ஆக்கிரமித்தும் வைக் கப்பட்டு உள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டு உள்ளது. இதனை தடுக்கவும், அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்த மனுவை மாவட்ட முதன்மை உரிமையியல் கோர்ட்டு அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. மனுவை விசாரித்த நீதிபதி காமராஜ், சாலைகளை சேதப்படுத்தி அலங்காரவளைவுகள் அமைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வக்கீல் பிரான்சிஸ் ஜூடுவினோத் என்பவரை ஆணையராக நியமித்து உத்தரவிட்டார். மேலும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர், நெடுஞ்சாலைத்துறை நிர்வாக என்ஜினீயர், அ.தி.மு.க. மாவட்ட முன்னாள் செயலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் வருகிற 19-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் கோர்ட்டு நியமித்த ஆணையர் பிரான்சிஸ் ஜூடு வினோத் நேற்று சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவுகளை ஆய்வு செய்து, அலங்கார வளைவுகளை அளவீடு செய்தார்.

அப்போது வழக்கு தொடர்ந்த வக்கீல் அதிசயகுமார், விஜயன் மற்றும் வக்கீல்கள் உடன் இருந்தனர். மேலும் இந்த ஆய்வு அறிக்கை வருகிற 19-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் கோர்ட்டு உரிய ஆணைகளை பிறப்பிக்கும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர். 

Next Story