திருப்பூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3,864 பேர் கைது


திருப்பூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3,864 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 3:28 AM IST (Updated: 8 Sept 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3 ஆயிரத்து 864 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர்கள் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் ஏற்கனவே அறிவித்தபடி அனைத்து பகுதிகளிலும் உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பணிகளும் நடைபெறவில்லை. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன்சிலை அருகில் நேற்று காலையில் ஏராளமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூடினார்கள். பின்னர் அவர்கள் அரசுக்கு எதிராகவும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராகவும் கோஷங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இதையடுத்து அவர்கள் ரெயில் நிலையத்தின் முன்புறம் உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 145 பெண்கள் உள்பட 585 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்லடம் ரோட்டில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பல்லடம் மற்றும் பொங்கலூர் வட்டாரங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 664 பெண்கள் உள்பட 816 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோல் மடத்துக்குளம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 183 பெண்கள் உள்பட 240 பேரும், தாராபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 380 பெண்கள் உள்பட 515 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், காங்கேயம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 380 பெண்கள் உள்பட 433 பேரையும், அவினாசி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 576 பெண்கள் உள்பட 718 பேரையும், உடுமலையில் போராட்டம் நடத்திய 382 பெண்கள் உள்பட 502 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்த போலீசார், மாலையில் விடுவித்தனர். இதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 710 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 864 பேரை போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்துக்குளியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story