‘‘உயர் படிப்புக்கான உதவித் தொகையை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’’
உயர் படிப்புக்கான உதவித்தொகையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என மந்திரி மந்திரி ராஜ்குமார் படோலேவின் மகள் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய அரசு வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் உயர் கல்வி படிக்க உதவித்தொகை பெறும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பயனாளிகளின் பட்டியலை வெளியிட்டது.இதில் சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலேவின் மகள் ஸ்ருதியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. தன் செல்வாக்கை பயன்படுத்தி மந்திரி தன் மகளுக்கு உதவித்தொகை பெற்று தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மந்திரி ராஜ்குமார் படோலே திட்டவட்டமாக மறுத்தார்.
‘‘தன் மகள் உயர் படிப்பிற்கான உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தது உண்மைதான் இருப்பினும் இதில் என்னுடைய பங்கு ஒன்றும் இல்லை’’ என தெரிவித்தார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் மந்திரி ராஜ்குமார் படோலேயின் மகள் ஸ்ருதி நேற்று இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நான் விரும்பியபடியே இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் என் உயர் படிப்பை தொடர உள்ளேன். அதற்காக அரசு அளிக்கும் உதவித்தொகையை பெறப்போவதில்லை.நான் உதவித்தொகை கேட்டு விண்ணப்பத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது? மந்திரியின் மகளாக பிறந்தது என் தவறா?
அரசு உதவித்தொகை 2015–ந்தின் படி எந்த வருமான பின்னானி உடைய எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களும் வெளிநாட்டு உயர் படிப்பிற்கான உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க முடியும். அதுவும் நான் விண்ணப்பித்த பி.எச்.டி. பட்டப்படிப்பிற்கு 3 பேருக்கு உதவித்தொகை ஒதுக்கப்படும். ஆனால் என்னுடன் சேர்ந்து வெறும் 2 பேர் தான் விண்ணப்பித்துள்ளனர். இது தெரியாமல் நான் திறமையான மாணவர்களின் வாய்ப்பை பறித்துவிட்டதாக ஏன் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்