அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: சாலைமறியலில் ஈடுபட்ட 329 பெண்கள் உள்பட 795 பேர் கைது


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: சாலைமறியலில் ஈடுபட்ட 329 பெண்கள் உள்பட 795 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 3:46 AM IST (Updated: 8 Sept 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தினால் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. சாலை மறியலில் ஈடுபட்ட 329 பெண்கள் உள்பட 795 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட ஒரு சில சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 7 பெண்கள் உள்பட 64 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, பரமக்குடி தாலுகா அலுவலக பகுதியில் ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் தலைமையில் 94 பெண்கள் உள்பட 240 பேர் கைது செய்யப்பட்டனர். கமுதி யூனியன் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமையில் 25 பெண்கள் உள்பட 75 பேர் சாலை மறியல் செய்ய முயன்று கைதாகினர். ராமேசுவரம் தாலுகா அலுவலக பகுதியில் மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமையில் மறியல் செய்ய முயன்ற 40 பெண்கள் உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை ஏர்வாடி முக்குரோடு பகுதியில் ஜாக்டோ மாவட்ட செயலாளர் லிங்கதுரை தலைமையில் மறியல் செய்ய முயன்ற 48 பெண்கள் உள்பட 95 பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் பஸ் நிலையம் பகுதியில் ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜோசப் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 20 பெண்கள் உள்பட 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலாடி தாலுகா அலுவலக பகுதியில் ஜியோ மாவட்ட துணை செயலாளர் செந்தில்வேல்முருகன் தலைமையில் 95 பெண்கள் உள்பட 190 பேர் மறியல் செய்ய முயன்று கைதாகினர். திருவாடானை முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு எமர்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு மாவட்டத்தில்நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் 329 பெண்கள் உள்பட 795 பேர் கைது செய்யப்பட்டனர். வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சங்கம் உள்பட பல சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், குறிப்பிட்ட சில சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாததால் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அன்றாட பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக அனைத்து பணிகளும் பெரும்பாலான பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு நடைபெற்றன.

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் மொத்தம் உள்ள 1,219 பேரில் அரசு ஊழியர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 4 பேரை தவிர 1,215 பேர் பணியில் ஈடுபட்டதால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல காவல்துறை அமைச்சு பணியாளர்கள் 63 பேரும் பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர, வருவாய்த்துறையில் 4 பேரும், ஊரக வளர்ச்சி துறையில் 384 பேரும், கூட்டுறவு துறையில் 29 பேரும், கருவூலத்துறையில் 2 பேரும், பேரூராட்சியில் 4 பேரும், மதிய உணவு திட்டத்தில் 483 பேரும், கல்வித்துறையில் 1,034 பேரும், நெடுஞ்சாலைத்துறையில் 74 பேரும் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர மாவட்டத்தில் 16,050 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்படவில்லை.

Next Story