காரைக்குடி, சிவகங்கை பகுதிகளில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்


காரைக்குடி, சிவகங்கை பகுதிகளில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2017 3:51 AM IST (Updated: 8 Sept 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி மற்றும் சிவகங்கையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவி அனிதா மரணத்திற்கு காரணமாக இருந்ததாக மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று காரைக்குடி, சிவகங்கை பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் காரைக்குடி ராஜீவ்காந்தி சிலை எதிரே நேற்று காலை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் கூடினர். பின்னர் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு காரணமாக இருந்ததாக மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முன்னதாக மாணவி அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.

போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம், மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த கரோலின், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பிராட்லா, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பில் இளையகவுதமன், தமிழர் தேசிய முன்னணி மாநில செயலாளர் மாறன் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இதேபோன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அரண்மனை வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாணவி அனிதா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து கல்லூரியில் இருந்து அரண்மனை வாசல் வரை ஊர்வலமாக சென்றனர்.

Next Story