திண்டுக்கல்லுக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு வரவேற்பு


திண்டுக்கல்லுக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 8 Sept 2017 4:13 AM IST (Updated: 8 Sept 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வருகை தந்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் புதிதாக கட்டப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதற்காக, அவர் சேலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக காரில் மதுரை சென்றார். முன்னதாக, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அங்கு திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் டி.ஜி.வினய், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

சரியாக காலை 11.40 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதியம் 12.10 வரை அங்கு தங்கி இருந்தார். பிறகு அவர் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பரமசிவம் எம்.எல்.ஏ, நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, திண்டுக்கல்லுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். இதையொட்டி, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story