தாளவாடி அருகே தோட்டத்தில் கரும்பு வெட்டிய 2 தொழிலாளர்களை சிறுத்தை கடித்து குதறியது


தாளவாடி அருகே தோட்டத்தில் கரும்பு வெட்டிய 2 தொழிலாளர்களை சிறுத்தை கடித்து குதறியது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:28 AM IST (Updated: 8 Sept 2017 4:28 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த 2 தொழிலாளர்களை சிறுத்தை கடித்து குதறியது. இதில் 2 பேரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான தோட்டம் பாரதிபுரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இவரது தோட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
இந்த நிலையில் சர்க்கரை ஆலைக்காக இவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இங்கு கர்நாடக மாநிலம் அமுச்சுவாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தங்கி இருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஒரு சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு கரும்பு வெட்டிக்கொண்டு இருந்த சிவமல்லு (வயது 30) என்பவர் மீது பாய்ந்து, அவரது இடது கன்னத்தை கடித்து குதறியது. இதனால் அவர் “அய்யோ அம்மா” என அலறினார். இதைப்பார்த்ததும் அருகே வேலை செய்து கொண்டிருந்த சிவராஜ் (31) ஓடி வந்து சிறுத்தையை பிடித்து தள்ளினார்.

அப்போது அவரையும் சிறுத்தை கடித்து குதறியது. இதற்கிடையில் சத்தம் கேட்டு தோட்டத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளர்கள் அங்கு ஓடோடி வந்தனர். ஆட்கள் வருவதை கண்டதும் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தோட்டத்தில் பதிவான சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் சிறுத்தை அருகே எங்காவது புதர் மறைவில் பதுங்கியுள்ளதா? என தேடினர். மேலும் பட்டாசுகளை வெடித்தும் பார்த்தனர். ஆனால் சிறுத்தையை காணவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தோட்டத்தில் கரும்பு வெட்டிய 2 பேரை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் தாளவாடி பகுதியில் பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. இதற்கிடையே படுகாயம் அடைந்த சிவராஜையும், சிவமல்லுவையும் மற்ற தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story