சம்பளத்தை உயர்த்த கோரி பெங்களூருவில் சுகாதார ஊழியர்கள் ஊர்வலம்
சம்பளத்தை உயர்த்த கோரி சுகாதார ஊழியர்கள் பெங்களூருவில் ஊர்வலம் நடத்தினர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திரண்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில ஒருங்கிணைந்த ‘ஆசா‘ சுகாதார ஊழியர்கள் சங்கத்தினர் சம்பளத்தை உயர்த்த கோரி பெங்களூருவில் நேற்று ஊர்வலம் நடத்தினர். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் பணி சீருடையில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் சேஷாத்திரி ரோடு வழியாக சுதந்திர பூங்காவை அடைந்தது. அங்கு அவர்கள் கூடி கூட்டத்தை நடத்தினர். இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நாகலட்சுமி பேசியதாவது:–சுகாதார ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும். அதாவது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஊக்கத்தொகை வழங்க வேண்டும். எங்களின் பணியை நிரந்தரம் செய்து, அனைத்து பயன்களையும் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் இதே போல் மாநில அளவில் போராட்டம் நடத்தினோம். அப்போது நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு கூறியது. இதுவரை இந்த அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
பெரும்பாலான ஊழியர்கள் விதவைகள், விவாகரத்து ஆனவர்கள், ஆண் துணை இல்லாதவர்களாக உள்ளனர். தற்போது அரசு வழங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. அதற்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவோம்.பகல்–இரவாக நாங்கள் இங்கேயே போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து போக மாட்டோம்.
இவ்வாறு நாகலட்சுமி பேசினார்.
Related Tags :
Next Story