அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
ராமநாதபுரம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மறியலில் மாவட்டம் முழுவதும் 329 பெண்கள் உள்பட 795 பேர் கைதாகினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து நேற்று ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகி தர்மராஜ், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி நைனாமுகம்மது, தமிழக ஆசிரியர் கூட்டணி எமர்சன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி லாரன்ஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.