கூடலூர்– கேரள சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் 2–வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
கூடலூர்– கேரள சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் 2–வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்களும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. காலை முதல் மதியம் வரை சற்று வெயிலும், அதன்பிறகு மழையும் பெய்து வருகிறது. கடந்த மாதம் 30–ந் தேதி கூடலூரில் இருந்து பாலக்காடு, பெருந்தல்மன்னா, கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மலைப்பாதையில் கீழ்நாடுகாணி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7½ மணிக்கு அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள், மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மழையும் தொடர்ந்து பெய்தது. இதனால் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவுக்கு செல்லும் மலைப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை.
இதனால் போலீசார் அனைத்து வாகனங்களையும் பந்தலூர், சேரம்பாடி வழியாக சுல்தான்பத்தேரிக்கு திருப்பி விட்டனர். மேலும் தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் சிவக்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லின் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த ராட்சத பாறைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல கட்டங்களாக போராடியும் ராட்சத பாறைகளை அகற்ற முடிய வில்லை.
இதை தொடர்ந்து சாலையில் விழுந்து கிடந்த ராட்சத பாறைகளை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு சாலையோரம் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின்னர் அதிகாலை 5 மணிக்கு சாலையின் ஒருபுறம் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள், மீட்பு குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு ராட்சத பாறைகளை அகற்றுவது குறித்து ஆலோசித்தனர். பின்னர் நேற்று 8–ந் தேதி காலை 7 மணிக்கு மீட்பு பணி தொடங்கப்பட்டது.
இதனால் கூடலூர்– கேரள மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் வேறு பாதைக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. மேலும் கேரளாவுக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு நாடுகாணி பஜாரில் போலீசார் ஆட்டோக்களை குறுக்கே நிறுத்தி வைத்து இருந்தனர். மாற்று பாதையில் செல்வதால் பல மணி நேரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டும் என்பதால் லாரி டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.
இதனால் ஏராளமான சரக்கு லாரிகள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நாடுகாணி– கூடலூர் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ராட்சத பாறைகளை வெடி வைத்து அகற்றி போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையொட்டி காலை 10 மணிக்கு ராட்சத பாறைகளில் 6 இடங்களில் துளையிட்டு அதில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டது.
இதனால் ராட்சத பாறைகள் பல துண்டுகளாக உடைந்தது. தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் கொண்டு பாறைகள் அகற்றப்பட்டது. ஆனால் சாலையோர மண் மேட்டில் சுமார் 40 அடி உயரத்தில் மற்றொரு ராட்சத பாறை எந்த நேரத்திலும் சரிந்து சாலையில் விழும் நிலையில் இருந்தது.
இதனால் அதையும் வெடி வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் பகல் 1 மணிக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராட்சத பாறையில் 7 இடங்களில் துளையிட்டு அதில் வெடி மருந்துகள் நிரப்பப்பட்டு வெடிக்கப்பட்டது. இதில் ஆபத்தான ராட்சத பாறை உடைந்து சாலையில் விழுந்தது. உடனடியாக அவைகள் அகற்றப்பட்டு மாலை 3½ மணிக்கு போக்குவரத்து தொடங்கியது.
மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டித்த சம்பவத்தால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.