சோமனூர் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியான 5 பேர் குறித்து உருக்கமான தகவல்கள்
கோவை அருகே சோமனூரில் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானது எப்படி என்ற உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.
கோவை,
கோவை அருகே உள்ள சோமனூரில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அங்கு நின்றிருந்த அரசு டவுன் பஸ்சின் நடத்துனர் சிவக்குமார் (வயது 43), பஸ்சுக்காக காத்து நின்ற நர்சிங் கல்லூரி மாணவி தாரணி (20), மற்றும் ஈஸ்வரி (40), துளசி (40), அரசூர் அருகே உள்ள சுப்பராம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (73) ஆகிய 5 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
அரசு பஸ் டிரைவர்கள் சண்முகம் (41), ராஜாராம் (38) உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் பஸ்நிலையத்துக்குள் நிறுத்தப்பட்டு இருந்த 2 அரசு டவுன் பஸ்களும் சேதம் அடைந்தன. படுகாயம் அடைந்த 18 பேர்களுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மேற்கூரை இடிந்து விழுந்த பஸ்நிலையத்துக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக பஸ்நிலையத்துக்குள் செல்லும் பாதை மற்றும் பஸ்கள் வெளியே வரும் பாதையை போலீசார் அடைந்து உள்ளனர். அத்துடன் போலீசார் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பஸ்நிலையத்துக்குள் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு பார்த்து வருகிறார்கள். இதன் காரணமாக பஸ்நிலையத்தில் உள்ள 12 கடைகள் மூடப்பட்டு உள்ளது. நேற்று காலையில் பஸ் நிலையத்துக்குள் சிதறி கிடந்த கட்டிட இடிபாடுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
இந்த விபத்தில் உயிரிழந்த தாரணி, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி.நர்சிங் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய தந்தை சின்னசாமி ஆசிரியர். இவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். எனவே தனது ஒரே மகள் தாரணியை, நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தாயார் புனிதவதி, தாரணியின் விருப்பத்தின்படியே நர்சிங் படிக்க வைத்தார்.
சோமனூர் அருகே இச்சிப்பட்டி கோம்பகாட்டுப்புதூர் அவருடைய சொந்த ஊர் ஆகும். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் தாரணி, வீட்டிற்கு செல்வதற்காக சோமனூர் பஸ்நிலையத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கி பலியானார். ஏற்கனவே விபத்தில் தனது கணவரை இழந்த புனிதவதி, தற்போது தனது ஒரே மகளையும் பறிகொடுத்துவிட்டு அனாதையாக நிற்பது காண்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது.
விபத்தில் பலியான துளசியின் சொந்த ஊர் குளத்துப்பாளையம் ஆகும். துளசியும், அவருடைய கணவர் பழனிசாமியும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் ராதா ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கணவன்–மனைவி இருவரும் வேலை செய்ததால் அதற்கான கூலி வங்கியில் செலுத்தப் பட்டது.
அந்த பணத்தை எடுப்பதற்காக பழனிசாமியும், துளசியும் நேற்று முன்தினம் காலையில் சோமனூர் சென்றனர். பணத்தை எடுத்துவிட்டு, தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். பிறகு, பஸ் ஏறி சொந்த ஊர் செல்வதற்காக சோமனூர் பஸ்நிலையத்தில் இருவரும் நின்றனர். அப்போது திடீரென்று பழனிசாமி எச்சில் துப்புவதற்காக வெளியே வந்தார். அப்போதுதான் திடீரென்று அந்த பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. அதில் தனது கண் முன்பே மனைவி சிக்கி பலியானதை பார்த்த பழனிசாமி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த ஈஸ்வரி திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர். இவருடைய கணவர் ராமலிங்கம். உடல் நிலை சரியில்லாத தனது மகன் மெய்யரசுவை (12) கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ஈஸ்வரி நேற்று முன்தினம் காலையில் அழைத்துச்சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும் சொந்த ஊர் செல்வதற்காக தாய்–மகன் இருவரும் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது மெய்யரசு தனது தாயிடம், மேற்கூரையில் இருந்து ஏதோ சத்தம் வருகிறது என்று கூறினார். அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே சற்று தள்ளி சென்று பார்த்து வருகிறேன் என்று கூறிய மெய்யரசு, அங்கு இருந்த இருக்கையில் இருந்து வெளியே வந்தார். அப்போது இடிந்து விழுந்த மேற்கூரைக்குள் ஈஸ்வரி சிக்கிக்கொண்டார். இதில் உயிர் தப்பிய மெய்யரசு தனது கண் முன் இறந்த தாயின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதது காண்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது.
அதுபோன்று பஸ்சுக்காக காத்து நின்ற பழனிசாமியும், மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்ததும், பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமாரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கூரை இடிந்து விழுந்த பஸ்நிலையத்துக்குள் இருந்த கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில், மேற்கூரை இடிந்து விழும் காட்சிகளும், பஸ்நிலையத்துக்குள் இருந்து பயணிகள் அலறியபடி வெளியே ஓடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சி வாட்ஸ்– அப், முகநூல் மற்றும் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வகையில் உள்ளது.