பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மலைக்கிராம மக்கள்
பெரும்பாறை அருகே, பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் மலைக்கிராம மக்கள் ஆற்றை கடக்கும் நிலை உள்ளது.
பெரும்பாறை,
கொடைககானல் ஒன்றியம் பெரும்பாறை அருகே உள்ள கே.சி.பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கல்லககிணறு மலைக்கிராமம். இங்கு ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இந்த கிராமத்தின் அருகில் ஒரு ஆறு உள்ளது. கிராம மக்கள் இந்த ஆற்றை கடந்து தான் கே.சி.பட்டி மற்றும் பெரும்பாறைக்கு செல்ல முடியும்.
ஆற்றை கடப்பதற்கு பாலம் அமைக்கப்படவில்லை. எனவே அப்பகுதி மக்கள் மரத்துண்டுகளை ஆற்றின் குறுக்கே போட்டு அதன் மூலம் ஆற்றின் மறுகரைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரும்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் குறுக்கே போடப்பட்ட மரத்துண்டுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் ஆற்றை கடக்க அந்த கிராம மக்கள் சிரமப்பட்டனர்.
வெளியூர் சென்றவர்களும் ஊருக்குள் வரமுடியாமல் தவித்தனர். இந்த நிலையில் பெரும்பாறை பகுதியில் தற்போது மழை பெய்வது குறைந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதையடுத்து ஆற்றின் குறுக்கே மீண்டும் மரத்துண்டுகளை போட்டு அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைககாலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் எங்கள் கிராமம் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. நாங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைப்பதில்லை. ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.