மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் துணை நிற்கும் திருநாவுக்கரசர் பேச்சு


மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் துணை நிற்கும் திருநாவுக்கரசர் பேச்சு
x
தினத்தந்தி 9 Sept 2017 8:30 AM IST (Updated: 9 Sept 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி,

பிளஸ்-2 அரசு பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று இருந்தும், நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாவட்டம் செந்துறை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அனிதா உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு. எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பேசினார்கள்.
கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சி தான் கொண்டு வந்தது. அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்தது என்று எல்லாரும் கேட்கிறார்கள். உண்மைதான். ஆனால் காங்கிரஸ் கொண்டு வந்த போது அதில் கட்டாயம் இல்லை. மாநில அரசு வேண்டும் என்றால் தேர்வை நடத்திக்கொள்ளலாம். வேண்டாம் என்றால் விட்டு விடலாம். ஆனால் இப்போது நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. நமது மாணவர்கள் படிப்பது சமச்சீர் கல்வி. நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப்படி தேர்வு நடத்தப்படுகிறது. அதனால் தான் நமது மாணவர்கள் அதில் வெற்றி பெற முடியவில்லை. போட்டி என்பது சம அளவில், சம நிலையில் இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மீண்டும் தமிழக அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.

இந்த போராட்டம் வெற்றி பெற ஒரே வழி இந்த ஆட்சியை மாற்றும் வேலையை ஸ்டாலின் செய்ய வேண்டும். நீங்கள் (ஸ்டாலின்) எடுக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் துணை நிற்கும். சாதி மதத்தால், மக்களை பிரித்து ஆள நினைக்கும் இந்த அரசுகள் அகற்றப்பட வேண்டும். இந்தியாவில் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும். அப்போது தான் தமிழகம் சுவிட்சமாக இருக்கும்.
இவ்வாறு கூறினார். அச்சப்படத்தேவையில்லை
கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

பொதுக்கூட்டத்திற்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. தலைவர்கள் கைதாக போகிறார்களா? என தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தடை எடப்பாடி அரசு சொல்லி விதிக்கப்பட வில்லை.

பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் புகார் கொடுத்ததால் தான் தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் பினாமி ஆட்சி நடக்கிறது என தெளிவாக தெரிகிறது. இந்த பொதுக்கூட்டம் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பொதுக்கூட்டம். இந்த பொதுக்கூட்டம் நீதி மன்ற அவமதிக்குள் வராது. அதனால் யாரும் அச்சப்படதேவையில்லை. நீட் தேர்வு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடத்திய நாடகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அனிதா ஏன் உயிர் இழந்தார். பொதுத்தேர்வில் அவரால் 1,176 மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்ன காரணம். அனிதாவின் நம்பிக்கை தகர்க்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க.அரசின் பிடிவாத போக்குதான் இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்தரசன் பேசியதாவது:-

மத்தியில் நடக்கும் ஆட்சி சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடக்கிறது. எந்த ஒரு ஆட்சியும், சட்டத்திற்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். ஆனால் மோடி ஆட்சி சட்டத்தை மீறியதாக இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி, மனுதர்ம ஆட்சியை நடத்த முயற்சி செய்து வருகிறார். மனு தர்ம ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இன்னும் எத்தனை பேரை சுட்டுக்கொல்வார்கள் என்று தெரியவில்லை. எனவே இந்த ஆட்சி நீடிக்க கூடாது. மாணவி அனிதா மரணம் தற்கொலை அல்ல. அவர் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு மத்தியில் உள்ள மோடி அரசும், எடப்பாடி அரசும் தான் காரணம். இந்த கூட்டம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி கிடையாது என்ற கொள்கையை சபதம் ஏற்க செய்யும் கூட்டம் ஆகும். இவ்வாறு கூறினார்.
போராட்டம் தொடரும் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. அனிதா மரணத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசும், மோடி அரசும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தராத பழனிசாமி ஆட்சி தொடர தகுதி கிடையாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மாநில அரசு சட்டம் கொண்டு வர அதிகாரம் இல்லையா. தேவைப்பட்டால் ஜல்லிக்கட்டு போல நீட் தேர்வு விலக்க கோரி மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மக்கள், மாணவர் நலனை பாதுகாக்க எத்தனை தடைகள் வந்தாலும், அந்த தடைகளை தகர்த்து எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க ஏற்பாடு செய்திருந்த கண்டன கூட்டத்திற்கு திருச்சி மாநகர போலீசார் தடை விதித்தனர். இதனால் கடைசி நேரத்தில் கூட்டம் நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தடையை மீறி கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அனைத்து தலைவர்களும் பேசிய பிறகு கூட்டம் நிறைவு பெற்றது.
கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:-

நீட் தேர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அனிதா படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். நீட் தேர்வு என்பது மத்திய அரசு செய்த ஒரு சூழ்ச்சி. இந்த கூட்டம் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு தொடக்கம் தான்.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதா சவப்பெட்டியில் அடைத்து புதைக்கப்பட்டு விட்டார். ஆனால் அவரது சாவுக்கு காரணமான நீட் தேர்வை சவப்பெட்டியில் அடைத்து ஆணி அடிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஆதிக்க சக்தியின் சிந்தனையை வேரோடும், வேரடி மண்ணோடும் அடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. தமிழகத்தில் நடப்பது ஒரு கொத்தடிமை ஆட்சி. இது வரை இது போன்ற ஒரு ஆட்சியை பார்த்ததே இல்லை. எனவே இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

Next Story