மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு திருச்சியில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது


மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு திருச்சியில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது
x
தினத்தந்தி 9 Sept 2017 5:30 AM IST (Updated: 9 Sept 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் உள்பட 8 கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். கடைசி நேரத்தில் கூட்டத்திற்கு போலீசாரின் தடை முயற்சியால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.

திருச்சி,

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திருச்சியில் செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பின்படி திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நேற்று மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதைத்தொடர்ந்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் அந்த மைதானத்திற்கு நேற்று மாலையில் இருந்தே வரத்தொடங்கினார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு வந்து கொண்டு இருந்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் வந்து அமர்ந்து இருந்தனர்.

இந்தநிலையில் நீட் தேர்வுக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து திருச்சி கண்டன பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர போலீசார் தடை விதித்தனர். இதனால் கண்டன கூட்டம் நடைபெறுமா? என்று தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஸ்ரீரங்கம் நகர உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீதர் பொதுக்கூட்ட திடலுக்கு தில்லைநகர் போலீசாருடன் வந்தார். பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற உத்தரவு கடிதத்தை முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ.விடம் வழங்குவதற்காக அவர் வந்தார். ஆனால் அப்போது நேரு அங்கு இல்லை. அவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மாநகர எல்லை பகுதிக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் மாலை 5.30 மணி அளவில் ஸ்டாலின் சங்கம் ஓட்டலுக்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், அவரை சூழ்ந்துகொண்டு உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டு இருப்பதால் பொதுக்கூட்டம் நடைபெறுமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஸ்டாலின், நான் இப்போது தான் வந்து உள்ளேன்.

தோழமை கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி விட்டு சொல்கிறேன் என கூறி, ஓட்டலில் தனியாக இருந்த ஒரு கூட்ட அரங்கிற்கு சென்றார். சிறிது நேரத்தில் அந்த அரங்கிற்கு தமிழ்நாடு காங் கிரஸ் கட்சி தலைவர் திரு நாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் சென்றனர். அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அங்கு வந்தார். அவரிடம் நிருபர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “திருச்சி உழவர்சந்தையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தி.மு.க. வுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு எதிராக எந்த ஒரு போராட்டமும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வந்து இருப்பதால், பொதுக் கூட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான கடிதம் தி.மு.க. மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.பின்னர் போலீஸ் கமிஷனர் அருண் ஸ்டாலின் இருந்த அறைக்குள் சென்றார். பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட விவரத்தை அவரிடம் எடுத்துக்கூறினார். அதற்கு ஸ்டாலின் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்றுதான் உத்தரவில் கூறி உள்ளனர். எனவே பொதுக்கூட்டம் நடத்துவோம் என்று விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து அரங்கை விட்டு வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம், “திட்டமிட்டபடி பொதுக் கூட்டம் நடைபெறும். எல்லோரும் பொதுக் கூட்ட திடலுக்கு வாருங்கள்” என கூறினார். பின்னர் கூட்டம் நடந்த இடத்திற்கு மாலை 6.40 மணிக்கு ஸ்டாலின் வந்தார். இதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தொடக்கத்தில் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து தி.மு.க. தோழமை கட்சி தலைவர்கள் வரிசையாக பேசினார்கள். இறுதியாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அனிதா உருவ படத்துக்கு அஞ்சலி
கண்டன பொதுக்கூட்டத்தில் மாணவி அனிதா உருவ படத்திற்கு தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story