வடகாடு அருகே கார் மோதி தொழிலாளி தலை துண்டாகி பலி


வடகாடு அருகே கார் மோதி தொழிலாளி தலை துண்டாகி பலி
x
தினத்தந்தி 9 Sept 2017 4:00 AM IST (Updated: 9 Sept 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு அருகே சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி தலை துண்டாகி பலியானார். இது தொடர்பாக கார் டிரைவரை கைது செய்ய வலியுத்தி, தொழிலாளியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வடகாடு,

ஆலங்குடி அருகே உள்ள அய்யனார் புரத்தை சேர்ந்தவர் அழகர் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரும், வடகாட்டை சேர்ந்த முகமது ஹனிபாவும்(44) நேற்று அதிகாலை காரில் கடுக்காகாடு பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. காரை முகமது ஹனிபா ஓட்டிச்சென்றுள்ளார்.
கடுக்காகாடு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த இரும்பாலான தடுப்பு கம்பியில் மோதியது. இதில், இரும்பு கம்பி குத்தி கிழித்ததில், தலை துண்டாகி காரில் இருந்த அழகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, முகமது ஹனிபா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்துக்கு சென்ற வடகாடு போலீசார் அழகர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தலைமறைவான முகமது ஹனிபாவை கைது செய்ய வேண்டும் எனக்கூறி வடகாடு மற்றும் ஆலங்குடி போலீஸ் நிலையங்களில் அழகரின் உறவினர்கள் புகார் கொடுத்தனர். புகார் மனுவை வடகாடு, ஆலங்குடி போலீஸ் நிலையங்களில் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அழகரின் உறவினர்கள், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்தும், தப்பியோடிய முகமது ஹனிபாவை கைது செய்ய வலியுறுத்தியும் ஆலங்குடி- கறம்பக்குடி சாலையில் பாச்சிக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, மரக்கட்டைகள், சிமெண்ட் குழாய்களை சாலையில் வைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலங்குடி போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், ஆலங்குடி- கறம்பக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story