அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்-ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 3:55 AM IST (Updated: 9 Sept 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின. இந்த நிலையில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியர்களோடு ஆசிரியர்களும் அதிக அளவில் பங்கேற்றனர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் நேற்று வழக்கமான பணிகள் முடங்கின.

இதையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், பட்டுவளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பொன்ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கவுரன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை ரத்து செய்து அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

ஊதிய மாற்றத்தை அமல்படுத்தும் முன்பு 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story