நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 3:58 AM IST (Updated: 9 Sept 2017 3:58 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,


நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்க கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பங்கேற்றனர்.

அப்போது, மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கிராமப் புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி வழங்குவதில் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும். மருத்துவக்கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட்தேர்வுக்கு எதிராகவும், தமிழக மாணவ-மாணவிகளின் கல்வி உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story